இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய படகு: கனடா சுற்றுலாப் பயணியை உயிருடன் மீட்பு!
இந்தியப் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில் தனது படகு பகுதியளவு நீரில் மூழ்கிய நிலையில், சிறிய ரப்பர் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த கனடாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியை அவுஸ்திரேலிய மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரிலிருந்து இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்குத் தெற்கே உள்ள அவுஸ்திரேலிய பிராந்தியமான 'கிறிஸ்மஸ் தீவு' நோக்கி அவர் தனது கேடமரான் வகை படகில் பயணித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவிலுள்ள தனது குடும்பத்தினருடன் அவர் இரண்டு முறை தொடர்பு கொள்ளத் தவறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் உடனடியாக அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார்.
தகவல் கிடைத்ததும் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தேடுதல் பணியைத் தொடங்கியது.
கிறிஸ்மஸ் தீவுக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில், பகுதியளவு நீரில் மூழ்கிய நிலையில் அவரது படகை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.
மாலுமி தனது படகின் சிறிய துணைப் படகில் தஞ்சமடைந்திருந்தது தெரியவந்தது. மீட்பு ஹெலிகாப்டர் மூலம் அவருக்கு உயிர் காக்கும் 'லைஃப் ராஃப்ட்', அவசர தகவல் கருவி, உணவு மற்றும் நீர் ஆகியவை வான்வழியாக வீசப்பட்டன.