கனடாவில் நகைக்கடையில் கொள்ளை ; ஐந்து சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
கனடாவின் பர்லிங்டன் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களை பொலிஸ் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மேபல்விவ் மால் வணிக வளாகத்திலுள்ள மிச்சல் ஹில் நகையகத்தில் கடையில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் தகவலின்படி, நான்கு சந்தேகநபர்கள் கடைக்குள் நுழைந்து சுத்தியலால் பல காட்சிப்பெட்டிகளை உடைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பல நகைகளை கைப்பற்றிய அவர்கள், வெளியே காத்திருந்த ஐந்தாவது நபர் செலுத்திய ஹொண்டா சிவிக் காரில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ நேரத்தில் வணிக வளாகத்துக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக ஆரம்ப தகவல்கள் கிடைத்தன.
ஆனால் விசாரணையில், கண்ணாடி காட்சிப்பெட்டிகளை சுத்தியலால் உடைத்தபோது ஏற்பட்ட சத்தமே அது என்று உறுதி செய்யப்பட்டது.
எந்தத் துப்பாக்கியும் பயன்படுத்தப்படவில்லை எனவும் இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கருதப்படும் வாகனத்தின் படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த சமப்வம் தொடர்பில் தகவல்கள் உடையவர்கள் அவற்றை பொலிஸாருடன் பகிருமாறு கோரப்பட்டுள்ளது.