கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 400 கிலோ தங்கம்: விசாரணையை துவக்கியுள்ள இந்தியா
திரைப்பட பாணியில் கனடா விமான நிலையத்தில் 6,600 தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்தியா விசாரணயைத் துவக்கியுள்ளது.
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அவற்றின் மீது ’பணம் மற்றும் தங்கக்கட்டிகள்’ என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. அந்த பார்சல்களில் 6,600 தங்கக்கட்டிகள் இருந்துள்ளன. அவற்றின் எடை சுமார் 400 கிலோகிராம்.
கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.
சிலர் வந்து உரிய ஆவணங்களைக் கொடுத்து அந்த தங்கக்கட்டிகளை எடுத்துச் சென்றனர்.
தங்கத்துக்கு உரியவர்கள் அதை வாங்கிச் சென்றதாக விமான நிலைய அதிகாரிகள் எண்ணிக்கொண்டிருக்க, பின்னர்தான் தெரியவந்தது, சிலர் திரைப்பட பாணியில் அந்தத் தங்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள் என்பது.
கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 41 மில்லியன் டொலர்கள்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்கமும் பணமும் என்ன ஆயின என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவை இந்தியாவுக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்னும் ரீதியில் செய்திகள் வெளியாகத் துவங்கின.
அந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவரான சிம்ரன் ப்ரீத் பனேசர் (Simran Preet Panesar, 32) என்பவர், கொள்ளை நடந்த விமான நிலையத்தில் பணியாற்றிவந்த நிலையில், தற்போது இந்தியாவிலுள்ள சண்டிகரில் வாழ்ந்துவருகிறார்.
இந்நிலையில், இந்திய அமலாக்க இயக்குநகரகம், தானாக முன்வந்து இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.
கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டதா என்பதை அறிவதற்காக விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
வழக்கில் தொடர்புடையவரான பனேசர் காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.