அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் பலி
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆறு இருக்கைகளைக் கொண்ட குறித்த விமானம், விஸ்கான்சின் மாகாணத்தின் கெனோஷா பகுதியிலிருந்து மெனோமேனி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில், பிரபல சுற்றுலாத் தலமான விஸ்கான்சின் டெல்ஸ் அருகே அமைந்துள்ள மிரர் லேக் மாநிலப் பூங்காவை அண்மித்த வனப்பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக, விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, விமானத்தின் இறக்கைகளில் பனி உறைந்து படிவதாகவும், இதனால் விமானத்தை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, விமானத்தைத் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், விமானத்தைத் தரையிறக்க முயன்றபோது அது விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த குழந்தை உட்பட ஆறு பேரும் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தின் இறக்கைகளில் பனி படிந்ததே விபத்துக்குக் காரணமா என்பது உள்ளிட்ட மேலதிக விபரங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.