சூடானில் தங்கச் சுரங்கம் விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழப்பு
ஆபிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு கோர்டோபன் மாகாணத்தில் எல்-நஹூத் நகருக்கு அருகில் அமைந்துள்ள அல்-சாரா தங்கச் சுரங்கமே நேற்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து சக தொழிலாளர்கள் தங்களிடமிருந்த கருவிகளைப் பயன்படுத்தி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாறைகள் மற்றும் மண்ணை அகற்றுவதற்கு கனரக இயந்திரங்கள் தேவைப்படுவதாக அங்கிருந்து தப்பிய தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மீட்புப் பணிகள் சிரமமடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. சுரங்கங்கள் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டிருப்பதே இதுபோன்ற சுரங்க விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2023ஆம் ஆண்டு முதல் சூடானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வாழ்வாதாரத்துக்காக பலர் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.