எஸ்பெஸ்டாஸ் அபாயம்; அவுஸ்திரேலியாவில் 69 பாடசாலைகளை மூட உத்தரவு
எஸ்பெஸ்டாஸ் அச்சத்தால் அவுஸ்திரேலியாவில் 69 பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிறுவர்களுக்கான வண்ண விளையாட்டு மணல் (Coloured Play Sand) பொருட்களில் எஸ்பெஸ்டாஸ் (Asbestos) என்ற ஆபத்தான இரசாயன பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால நுரையீரல் புற்றுநோய்
நச்சுத்தன்மை வாய்ந்த எஸ்பெஸ்டாஸ் காற்றில் கலந்தால், சுவாசிப்பவர்களுக்கு நீண்ட கால நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடும்.
இந்தநிலையில், கேமார்ட் (Kmart) மற்றும் டார்கெட் (Target) ஆகிய நிறுவனங்கள் இந்த மணலைத் திரும்பப் பெற்றுள்ளன.
இருப்பினும்,மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, எஸ்பெஸ்டாஸ் மணலைப் பயன்படுத்திய சுமார் 69 பாடசாலைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.

குறித்த பாடசாலைகள் அனைத்திலும் விரிவான ஆய்வு மற்றும் வளி பரிசோதனை (Air Testing) நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் யெவெட் பெர்ரி (Yvette Berry), தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், காற்றில் எஸ்பெஸ்டாஸ் எதுவும் பரவவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மணல் மூலம் காற்றில் எஸ்பெஸ்டாஸ் பரவும் அபாயம் மிகவும் குறைவு எனவும் அவுஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேபோன்ற மணல் அபாயம் காரணமாக ஏற்கனவே சில பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மூடல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல், நியூசிலாந்திலும் சில பாடசாலை இதே காரணத்திற்காக மூடப்பட்டு சோதனையிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.