அமெரிக்காவில் 17 வயது சிறுமி மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள்
அமெரிக்கா சந்தியாகோ பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்த சம்பவத்தை இணையத்தில் நேரலை செய்வதற்கு உதவியதாகக் கூறப்படும் 17 வயது சிறுமி மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த மே 18ஆம் திகதி சந்தியாகோ இஸ்லாமிய மையத்தில் 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர்.

ஹெல்மெட் கமராக்கள் மூலம் பதிவு
நோர்த் கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி, தாக்குதல்தாரிகளின் அறிக்கையை வெளியிடுவதுடன், ஹெல்மெட் கமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட தாக்குதலை இணையத்தில் நேரலை செய்வதற்கும் உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றத்திற்கு நேரடியாகச் செயல்பட்டவர்களுக்கு உதவி அல்லது ஒத்துழைப்பு வழங்கியவர்களும், அந்தக் குற்றத்தை நேரடியாகச் செய்தவர்களைப் போன்றே குற்றவியல் ரீதியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற மாநில சட்டத்தின் அடிப்படையில் சிறுமி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தாக்குதல்தாரிகளான இரு இளைஞர்களும் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் தங்களைத் தாங்களே சுட்டு உயிரிழந்தனர். அவர்களிடமிருந்து 30 துப்பாக்கிகள் மற்றும் வில்-அம்பு உள்ளிட்ட பெருமளவான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசலின் பாதுகாப்பு அதிகாரியான அமீன் அப்துல்லா, தாக்குதல்தாரிகளுடன் போராடி கட்டிடத்தைப் பாதுகாப்பாக மூடியதன் மூலம் உள்ளே இருந்த சுமார் 140 சிறுவர்களைக் காப்பாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த முயற்சியின்போது அமீன் அப்துல்லாவும் இரு வழிபாட்டாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், தாக்குதல்தாரிகள் யூத ஆலயம் மற்றும் ஆபிரிக்க-அமெரிக்கர்கள் அதிகளவில் பயிலும் பாடசாலை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், வெள்ளை இன மேலாதிக்க சித்தாந்தத்தால் அவர்கள் தூண்டப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.