ஜோர்தான் தாக்குதலில் புதிய திருப்பம் ; ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னால் புதிய மர்மம்
ஜோர்தானில் உள்ள முவாஃபக் அல்-சால்டி (Muwaffaq Al-Salti) வான்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து அமெரிக்க புலனாய்வாளர்கள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த ஏவுகணைத் தாக்குதலில் 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலுக்கு முன்னர், சம்பந்தப்பட்ட இராணுவ முகாமின் அதிநவீன செயற்கைக்கோள் புகைப்படங்களை ஈரான் பெற்றிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலின் மூலம் அமெரிக்க வீரர்களின் இருப்பிடம், இராணுவ தளவாடங்கள் மற்றும் முகாமின் கட்டமைப்பு குறித்த விவரங்களை ஈரான் பெற்றிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.
தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக, முகாமிற்கு ஏற்பட்ட சேதங்களை ஈரான் அதிகாரிகள் மதிப்பீடு செய்திருக்கக் கூடும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே அல்-சால்டி முகாமின் காணொளிகள் வெளியானதைத் தொடர்ந்து, இலக்கு வைக்கப்பட்ட இடத்திலிருந்து இவ்வளவு விரைவாக ஈரான் எவ்வாறு தகவல்களைப் பெற்றது என்பது குறித்து அமெரிக்கா விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.