பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்த சந்தேக நபர்!
பிரித்தானியாவில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பின்னர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் வியாழக்கிழமை கிரேட்டர் மான்செஸ்டர் பகுதிகளில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக கிடைத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர்.
இதையடுத்து வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர், ஆனால் அந்த நபர் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், வன்முறையில் பலத்த காயங்களால் பாதிக்கப்பட்டவரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தின் போது ஐந்து பொலிஸ் வேன்கள் காணப்பட்டதாக சாட்சிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் தேசிய பொலிஸ் ஏர் சர்வீஸ் (NAPS) ஹெலிகாப்டர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், அதில் ஒரு தேடுதல் விளக்கு பொருத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் இருவரும் வருகை தந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் அப்பகுதியில் உள்ள பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விசாரணை தொடங்கி இருப்பதாகவும், கூடுதல் விசாரணைகளை நடத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.