விமானத்தை தகர்க்க முயன்றதாக குற்றச்சாட்டு ; ஓமன் துணை விமானியிடம் ஆஸ்திரேலியா விசாரணை
விமானத்தை தகர்க்க முயன்றதாக கூறப்படும் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி தொடர்பாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில், குறித்த துணை விமானி ஆஸ்திரேலியாவில் இருந்த காலத்தில் பயங்கரவாதப் பயிற்சி பெற்றாரா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் பிளைதுபாய் போயிங் விமானத்தில் 174 இஸ்ரேலிய பயணிகள் உள்ளிட்ட 180க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விமானம் ஜோர்டான் வான்பரப்பில் சுமார் 33,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி திடீரென தலைமை விமானியை தாக்கியதாகவும், பின்னர் விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதன்போது விமானம் திடீரென கீழ்நோக்கி இயக்கப்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நிலையிலும் தலைமை விமானி விமானத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற போராடியதாகவும், விமானத்தில் இருந்து அவசரநிலை சமிக்ஞை அனுப்பப்பட்டதையடுத்து அங்கிருந்த சில பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உதவிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் துணை விமானி கட்டுப்படுத்தப்பட்டு, விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி என்பவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அவருக்கு அல்-கொய்தா அமைப்பின் கொள்கைகளுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணைகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அவர் விமானி பயிற்சி பெற்ற காலத்தில் பயங்கரவாதம் தொடர்பான இணையதள தகவல்களைத் தொடர்ந்து தேடியதாகவும், இதன் காரணமாக ஓமன் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர் விமானி பணியில் இருந்து மாற்றப்பட்டு அலுவலகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அந்தப் பணியை அவர் ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த நபர் 2014ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றதாகவும், 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அங்கு கல்வி கற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டில் அவர் எந்தவொரு கல்வி நடவடிக்கையையும் தொடராத நிலையில், அவரது மாணவர் விசா ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்த காலத்தில் அவர் ஏதேனும் பயங்கரவாதப் பயிற்சியைப் பெற்றாரா என்பது தொடர்பாக அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம்ஷைர் நியூ பல்கலைக்கழகத்தில் இணையவழி கல்வியைத் தொடர்ந்ததாக அவர் தனது LinkedIn கணக்கில் குறிப்பிட்டிருந்த தகவலையும் CNN செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத் தாக்குதல் சம்பவம் மற்றும் குறித்த துணை விமானியின் பின்னணி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.