கவர்ச்சி உடையில் சென்ற அதிகாரிகள் நடத்திய அதிரடி கைது ; வைரலான புகைப்படம்
தாய்லாந்தின் லோப்புரி மாகாணத்தில் நடைபெற்ற வீதி நடனத் திருவிழா ஒன்றின் போது, “மேகா பா-வாப்-வாப்” என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரை கைது செய்ய காவல்துறையினர் வித்தியாசமான திட்டமொன்றை செயல்படுத்தினர்.
இதற்காக ஐந்து ஆண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் அதிகாரி என மொத்தம் ஆறு பேர், பளபளப்பான கவர்ச்சியான ஆடைகளை அணிந்து பெண் நடனக் குழுவினரைப் போல மாறுவேடமிட்டு சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

பின்னர், நடன நிகழ்வில் கலந்து கொண்டது போல் நடித்து சந்தேகநபரை நெருங்கிய அதிகாரிகள், அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 53 மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் மாத்திரைகள், போதைப்பொருள் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 200 பிளாஸ்டிக் பைகள் மற்றும் சட்டவிரோத இணையவழி சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கைபேசி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் சட்டவிரோத இணைய சூதாட்டத்தை நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கைது நடவடிக்கைக்கு பின்னர் காவல்துறை அதிகாரிகள் தங்களது மாறுவேட ஆடைகளுடனேயே, கைவிலங்கிடப்பட்ட சந்தேகநபரின் பின்னால் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
“நாங்கள் சும்மா சென்று அவரை எப்படி கைது செய்வது? ஆடை வாடகைக்கு எடுத்த பணம் வீணாகிவிடுமே!” என்ற நகைச்சுவை வாசகத்துடன் பகிரப்பட்ட அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.