இலக்கை நெருங்கும் ஆதித்யா விண்கலம்!
சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம் தனது இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஆதித்யா எல்1 விண்கலம் எதிர்வரும் ஜனவரி 7- ஆம் திகதியன்று உரிய இடத்தில் நிலைநிறுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆதித்யா எல்1 விண்கலமானது புவியிலிருந்து 15 இலட்சம் கி.மீ தொலைவில் உள்ள லெக்ரேஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்படும்.
அங்கிருந்து ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனின் மேல்வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் வடிவமைக்கப்பட்டு கடந்த (02.09.2023) ஆம் திகதி காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி 57 ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டிருந்தது.
அதன்பிறகு அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் பி.எஸ்.எல்.வி – சி 57 ரொக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் தனியாகப் பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இதையடுத்து மொத்தம் 5 படிநிலைகளில் விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.
ஆதித்யா எல்-1 விண்கலம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த விண்கலம் பூமியில் இருந்து 15 இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் லெக்ராஞ்சியன் புள்ளியில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்பட்ட பின்னர் விண்கலத்தில் உள்ள 7 கருவிகள் ஆய்வை மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சூரியனின் மேற்வளிமண்டலம், வெளிப்புற அடுக்கு குறித்த ஆய்வுகளை ஆதித்யா எல் -1 விண்கலம் மேற்கொள்ள உள்ளது. இதற்கிடையே ஆதித்யா எல்.1 விண்கலம் உயர் ஆற்றல் கொண்ட சூரியக் கதிர்களை படமெடுத்து அனுப்பியிருந்தது.
ஆதித்யா எல் 1 விண்கலம் அனுப்பிய இந்த டேட்டாக்கள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரோன் குறித்த ஆய்வினை செய்ய உதவும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலம் தற்போது இறுதிக்கட்டப் பயணத்தில் உள்ளது.
இதேவேளை இந்தியாவில் விண்வெளி ஆய்வு தொடங்கப்பட்டு 60 ஆண்டு நிறைவு அடைந்துள்ளது. இது தொடர்பாக திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உரையாற்றுகையில், “ஆதித்யா எல்-1 விண்கலம் இறுதிக்கட்டப் பயணத்தில் உள்ளது. எதிர்வரும் (07.01.2024) ஆம் திகதி எல்-1 புள்ளியை ஆதித்யா விண்கலம் சென்றடையும்.
ஆதித்யா விண்கலம் 125 நாட்களில் 15 இலட்சம் கி.மீ பயணம் செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.
சந்திரயான்- 3 தரையிறக்கத்தின் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அடுத்ததாக சூரியனை ஆராய்ச்சி செய்யும் ரூபா 424 கோடி மதிப்பிலான ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி சாதனை புரிந்து வருகின்றது.
பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் மொத்தம் 7 பேலோடுகளை சுமந்து சென்றுள்ளது. இவற்றில் 4 பேலோடுகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும்.
3 பேலோடுகள் சூரியனின் வெளிப்பகுதி, துகள்கள், எல்-1 பகுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே Lagrange point எனப்படும் ஐந்து புள்ளிகள் உள்ளன. இந்த புள்ளிகளில் நிலவும் சமநிலை காரணமாக, இங்கு வைக்கப்படும் பொருள் சூரியனால் ஈர்க்கப்படாது.
அந்தப் புள்ளிகளில் நிலைநிறுத்தப்படும் பொருட்களுக்கு சூரியனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
அதன்படி, லேக்ரேஞ் புள்ளி 1 (எல்1)-இல், இஸ்ரோவின் ஆதித்யா எல்1 செயற்கைகோள் நிலைநிறுத்தப்படவுள்ளது.
புவியில் இருந்து 15 இலட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி விண்கலம் சென்று கொண்டிருக்கிறது.
எல்-1 புள்ளி அருகே சென்றதும் விண்கலம் அதை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் (Halo Orbit) நிலைநிறுத்தப்பட உள்ளது.
அங்கிருந்தபடியே எல்-1 பகுதியை மையமாகக் கொண்ட சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு சூரியனின் கரோனா மற்றும் போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பகுதிகளை ஆதித்யா ஆய்வு செய்யும்.
இதற்காக அதில் 7 விதமானஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.