எம்பயர் ஸ்டேட் கோபுர உச்சியில் சாகசம் ; காதல் ஜோடி செய்த காரியம்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் தொலைத்தொடர்பு கோபுர உச்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியே ஆபத்தான முறையில் ஏறி, திருமண முன்மொழிவை மேற்கொண்டதாகக் கூறப்படும் இளம் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்ட சாகச வீரர்களான எஞ்சலா நிகோலாவ் (Angela Nikolau) மற்றும் வான்யா பீர்கஸ் (Vanya Beerkus) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருப்பு நிற ஆடைகளை அணிந்திருந்த இருவரும், சுமார் 1,454 அடி உயரமுள்ள ஒளிபரப்புக் கோபுரத்தின் உச்சிவரை கயிறுகள் அல்லது வேறு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஏறியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சாகசத்தை சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பியதுடன், “அதிகாரத்தின் மீதான காதலை விட காதலின் அதிகாரம் மேலோங்கும்போது உலகம் அமைதியை அறியும்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்த கொடியையும் அவர்கள் பறக்கவிட்டிருந்தனர்.
இந்த ஜோடி உயரமான கட்டிடங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஏறும் சாகசங்களுக்காக ஏற்கனவே அறியப்பட்டவர்களாகும்.
இதற்கு முன்னர், மலேசியாவின் 2,227 அடி உயரமுள்ள மெர்டேகா 118 கோபுரத்தில் ஏறிய சம்பவம் தொடர்பான ஆவணப்படத்திலும் அவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் கோபுரத்தின் உச்சிவரை அவர்கள் சென்றதால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒளிபரப்பு அலைவாங்கி தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்துடன் இயங்கும் கோபுரத்தின் மீது ஏறியதால், மின்காந்த அலைகளின் தாக்கத்திற்கும் அவர்கள் உள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, முறையற்ற அத்துமீறல், கவனக்குறைவாக ஆபத்தை ஏற்படுத்துதல் மற்றும் ஒழுங்கீனமான நடத்தை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.