இஸ்ரேலுக்கு பதிலடி; 200 ராக்கெட்டுகளை ஏவிய ஹிஸ்புல்லா!
இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 200 ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா ஏவிய நிலையில் அதனை நடுவானில் தடுத்து நிறுத்தி இஸ்ரேல் அழித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் ஹமாஸ் மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நடுவானில் தடுத்து நிறுத்தி அழித்த இஸ்ரேல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி முதல் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இஸ்ரேலின் ரமத் டேவிட் விமானப்படைத்தளம் , நாசரேத் நகரம், மஹிடோ விமானப்படைத்தளம், ஹைபா, அப்லா போன்ற நகரங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
எனினும் , இந்த ராக்கெட்டுகளை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் தடுத்து நிறுத்தி அழித்தது. இந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.