தெற்கு லெபனானில் வான்வழித் தாக்குதல் ; 19 பேர் உயிரிழப்பு
தெற்கு லெபனானின் சிர் அல்-கர்பியா (Sire al Gharbiya) நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், சிறுவர்கள் உட்பட குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் (NNA) அறிவித்துள்ளது.
சிர் அல்-கர்பியா பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் குறித்த கட்டிடம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அங்கு தங்கியிருந்த பொதுமக்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர், இடிபாடுகளை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
போர்ச் சூழல் காரணமாக மீட்புப் பணிகளில் சவால்கள் நிலவுகின்ற போதிலும், பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.