மாலியில் அல்கொய்தா தலைவர் பலி; பிரான்ஸ் படை தகவல்
மாலியில் பிரான்ஸ் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் அல் கொய்தா தலைவர் பலியானார்.
மாலி, நைஜர், சாத், புர்கினோ பாசோ மற்றும் மவுரித்தேனியா ஆகிய 5 ஆப்பிரிக்க நாடுகளை உள்ளடக்கிய ‘ஜி5 சஹேல்' நாடுகளில் பிரான்ஸ் ‘ஆபரேஷன் பார்கேன்' என்ற பெயரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாக மேற்கூறிய ஆப்பிரிக்க நாடுகளில் பிரான்ஸ் படைகள் முகாமிட்டு ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான் வழியாகவும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்கொய்தா ஆதரவு பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுதியாக இருப்பதால் அங்கு பிரான்ஸ் வீரர்கள் அதிக அளவில் முகாமிட்டு மாலி ராணுவத்துடன் இணைந்து பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டின் பிற்பகுதியில் மாலி ராணுவம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு அங்கு நிலைமை மேலும் மோசமானது. இதன்காரணமாக அங்கு பயங்கரவாதிகளின் கை மேலும் ஓங்கியுள்ளது.
இதன்படி கடந்த மாத இறுதியில் மாலியின் வடகிழக்கு மாகாணம் ஆர்காமில் உள்ள ராணுவ முகாமுக்குள் நள்ளிரவில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 8 வீரர்கள் பலியாகினர். மேலும் பல வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மாலியில் சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.
இதனால் மாலி ராணுவம் பிரான்ஸ் படைகளுடன் இணைந்து பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் மாலியில் பிரான்ஸ் படைகள் நடத்திய வான்தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் அபு அம்மார் அல் ஜசைரி கொல்லப்பட்டதாக பிரான்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.
மாலியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திம்புக்டு பிராந்தியத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததாகவும், இதில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் நிதி மற்றும் தளவாடங்கள் வினியோகத்துக்கு தலைமை தாங்கி வந்த அபு அம்மார் அல் ஜசைரி, பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பிரான்ஸ் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லிபியாவின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு வலுப்பெற முக்கிய காரணமாக இருந்த அபு அம்மார் அல் ஜசைரி, கடந்த 2019-ம் ஆண்டு மாலி வந்தார்.
பின்னர் அவர் மாலியில் பயங்கரவாத அமைப்பை ஒழுங்கமைக்கவும், பொருட்கள், நிதி மற்றும் தளவாடங்களை ஒருங்கிணைக்கவும் உதவினார். அவரது மரணம் மாலியில் மீண்டும் அல்கொய்தாவின் ஆளுகையை பலவீனப்படுத்துகிறது” என கூறப்பட்டுள்ளது.