அல்பெர்ட்டா பிரிவினை வாக்கெடுப்பை ரத்து செய்ய எதிர்க்கட்சி கோரிக்கை!
அமெரிக்காவுடனான கடுமையான வர்த்தக மோதலுக்கு கனடா முகம் கொடுத்து வரும் இந்தச் சூழலில், கனடாவிலிருந்து அல்பெர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என அல்பெர்ட்டாவின் எதிர்க்கட்சித் தலைவர் நாஹீத் நென்ஷி வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 19-ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வாக்கெடுப்பைக் கைவிட்டு, நாடு முழுவதும் ஒற்றுமையைக் காட்ட வேண்டியது அவசியம் என கால்கரியில் செய்தியாளர்களிடம் பேசிய நென்ஷி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சுமார் 28 பில்லியன் டாலர் மதிப்பிலான கனடிய பொருட்களுக்கு இறக்குமதி வரிகளை விதித்துள்ள நிலையில், செப்டம்பர் 8 முதல் உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட பல அமெரிக்கப் பொருட்களுக்குப் பதிலடி வரிகளை விதிக்க கனடா ஆயத்தமாகி வருகிறது.

இத்தகைய பொருளாதார நெருக்கடி காலத்தில் மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் பிரிவினைவாதிகளுக்குப் பணிந்து போவது கனடாவின் பலவீனத்தையே உலகிற்கு வெளிக்காட்டும் என்று நென்ஷி கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கியூபெக் மாகாணப் பிரிவினைவாதத் தலைவர்கள் கூட அதிபர் டிரம்ப் ஆட்சிக்காலம் முடியும் வரை வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ள நிலையில், அல்பெர்ட்டா அரசு இந்த ஆபத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இருப்பினும், நென்ஷியின் இந்த கோரிக்கையை மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் நிராகரித்துள்ளார். வாக்கெடுப்பு கோரி லட்சக்கணக்கான பொதுமக்கள் ஏற்கனவே மனுக்களில் கையெழுத்திட்டுள்ளதால், அக்டோபர் 19 அன்று திட்டமிட்டபடி வாக்கெடுப்பு நடைபெறும் என்பதில் தமது அரசு உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், கனடாவிலேயே அல்பெர்ட்டா நீடிக்க வேண்டும் என்பதற்கே தாம் தனிப்பட்ட முறையில் வாக்களிக்கவுள்ளதாகவும் முதல்வர் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அல்பெர்ட்டா கனடாவில் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி இருவேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்களான ரேச்சல் நாட்லி மற்றும் ஜேசன் கென்னி ஆகியோர் இணைந்து விழிப்புணர்வுப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அல்பெர்ட்டா மாகாணத்தின் எதிர்கால நலன் கனடாவுடன் இணைந்து செயல்படுவதிலேயே உள்ளது என்பதில் இருவரும் ஒன்றுபட்டு கனடா வர்த்தக சபையுடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.