அல்பர்ட்டாவில் பாடசாலைகளில் கொடிக்கம்பங்கள் குறித்து வெளியான அறிவிப்பு
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய சட்டத்திற்கு அமைய, பாடசாலைகள் மேலதிகமாகப் புதிய கொடிக்கம்பங்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை என மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பாடசாலைக்கு வெளியிலும் கனடிய தேசியக் கொடியையும், அல்பர்ட்டா மாகாணக் கொடியையும் கட்டாயம் ஏற்ற வேண்டும் என மாகாண அரசாங்கம் அண்மையில் புதிய விதிமுறைகளை அறிவித்திருந்தது.
இது குறித்துப் பாடசாலை சபைகளிடையே பெரும் சர்ச்சையும் நிதிச் சுமை குறித்த கவலையும் எழுந்திருந்தது.

கல்கரி கல்விச் சபை இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், தமது கீழுள்ள பல பாடசாலைகளில் ஒரேயொரு கொடிக்கம்பம் மட்டுமே உள்ளதால், புதிதாக 223 கொடிக்கம்பங்களை நிறுவ வேண்டியிருக்கும் என்றும், இதற்கு சுமார் 4 மில்லியன் டொலர்கள் வரை செலவாகும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
அதேபோல், எட்மன்டன் பொதுப் பாடசாலைச் சபையும் தமக்குக் குறைந்தது 170 புதிய கொடிக்கம்பங்கள் தேவைப்படும் எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை காலை நடைபெற்ற தனது வானொலி நிகழ்ச்சியில் நேயர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் டேனியல் ஸ்மித் இந்தத் தளர்வை அறிவித்துள்ளார்.