கனடாவிடமிருந்து விடுதலை வேண்டும்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்த கனேடியர்கள்
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், கனடாவிலிருந்து விடுதலை வேண்டும் என கோரிவருகிறது.
இந்நிலையில், ஆல்பர்ட்டா மாகாண பிரதிநிதிகள், ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளை சந்தித்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

1930,40களிலிருந்தே, ஆல்பர்ட்டா மாகாணத்தில் கனடாவிலிருந்து பிரியவேண்டும் என்னும் குரல்கள் ஒலித்துவருகின்றன.
2025இல் இடதுசாரிக் கொள்கைகள் கொண்ட லிபரல் கட்சியின் மார்க் கார்னி பிரதமரானதைத் தொடர்ந்து, அவரது கொள்கைகள் ஆல்பர்ட்டாவின் பாரம்பரியக் கொள்கைகளுக்கு நேரெதிராக உள்ளதால், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரியவேண்டும் என மீண்டும் குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.
ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும்.
ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு ஃபெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது.
ஆகவே, வளம் நிறைந்த ஆல்பர்ட்டா, கனடாவிலிருந்து பிரிந்து தன்னைத்தான் நிர்வகிக்கவேண்டும் என ஆல்பர்ட்டா மக்களில் ஒரு பிரிவினர் கருதுகிறார்கள்.
இந்நிலையில், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரியவேண்டும் என்னும் கருத்து கொண்ட அமைப்பின் பிரதிநிதிகள் சிலர், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரை சமீபத்தில் சந்தித்ததால் கனடாவில் பரபரப்பு உருவாகியுள்ளது.

அந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, கனேடிய மாகாணங்களின் பிரீமியர்களின் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார் கனடா பிரதமரான மார்க் கார்னி.
மாகாண பிரீமியர்களின் சந்திப்புக்குப் பின் ஊடகவியலாளர்களிடம் பேசிய பிரதமர் மார்க் கார்னியிடம் வெளிநாட்டு தலையீடு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்ப, அமெரிக்கா கனடாவின் இறையாண்மையை மதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் கார்னி.
ஆக, ஏற்கனவே கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக ட்ரம்ப் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், ஆல்பர்ட்டா பிரிவினைவாதிகள் ட்ரம்ப் நிர்வாகிகளை சென்று சந்தித்துள்ளதால், கனடா அரசியலில் பரபரப்பு உருவாகியுள்ளது.