திருமண நிகழ்ச்சிகள், விழாக்களில் இனி இதற்கு தடை! அரசாங்கம் அதிரடி நடவடிக்கை
தமிழகத்தில் வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறைக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.
தமிழ்நாட்டிலும் வழங்கிட கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன.
இது தொடர்பில் பெறப்பட்ட கருத்துக்களை கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசாங்கம், தற்போது அவற்றை நீக்கி, வணிக வளாகங்களில் உள்ள மாநாட்டு மையங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச, தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள்/விளையாட்டு அரங்குகளில், அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருத்தல் மற்றும் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிக்கையினை நேற்று (25-04-2023) வெளியிட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.