250 பேரை பணி நீக்கம் செய்தது அமேசான் ; மின்னஞ்சலில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவில் பணியாற்றும் 250 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனத்தின் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிநீக்கம் தொடர்பான தகவல், இன்று (ஒக்டோபர் 29) அதிகாலை மின்னஞ்சல் வாயிலாக ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களை நீக்குவது என்ற கடினமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், அமேசான் தனது முக்கிய சில்லறை விற்பனைப் பிரிவில் சுமார் 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த ஜனவரி மாதம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில், சுமார் 16,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் 250 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை, நிறுவனத்தின் செலவுக் கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கவனத்தை ஈர்த்துள்ளது.
அமேசான் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஊழியர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
“நாம் அனைவரும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும். இல்லையெனில், நாம் பின்தங்கிவிடும் அபாயம் உள்ளது” என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், நிறுவனங்களின் பணியாளர் கட்டமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.