இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாட்டை தளர்த்தியது அமெரிக்கா
இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளா்த்தியுள்ளது. இப்போது கரோனா பாதிப்பு மிதமாக உள்ள நாடு (2-ஆவது நிலை) என்ற பட்டியலில் இந்தியாவை அமெரிக்கா மாற்றியுள்ளது.
இதன்படி இருமுறையும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடு (4-ஆவது நிலை) என்று அமெரிக்க சுகாதாரத் துறை பட்டியலிட்டது.
இதன்படி, அமெரிக்கா்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை பரவியபோது இந்த அறிவுறுத்தலை அமெரிக்கா வழங்கியிருந்தது. அமெரிக்கா்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, சுகாதாரத் துறையின் கொரோனா பாதிப்பு தொடா்பான பட்டியலில் அந்த நாடு எந்த இடத்தில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு பயணம் மேற்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவில் பயங்கரவாத செயல்பாடுகள் அதிகமுள்ள ஜம்மு-காஷ்மீருக்கு (கிழக்கு லடாக், லே தவிர) செல்ல வேண்டாம் என்று தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இது தவிர இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குச் பயணிப்பதாக இருந்தால் 10 கி.மீ. தொலைவுக்கு முன்னதாகவே பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா அரசு கூறியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை பெரும்பாலும் மோதல் ஏற்படும் பதற்றம் உள்ள பகுதியாக இருப்பதால் அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.