கனடாவில் பிரசித்தி பெற்ற இந்து கோவில் மீது தாக்குதல்!
கனடாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது கடந்த ஆண்டில் அதிகரித்து இருந்தது.
அண்மைக்காலங்களாக இந்து மத ஆலயங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலான கவுரி சங்கர் கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இதற்கு ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்றைய தினம் (31-01-2023) வெளியிட்ட அறிவிப்பில்,
வெறுக்கத்தக்க வகையிலான இந்த செயல்கள், கனடாவில் வசிக்கும் இந்து சமூகத்தினரின் உணர்வுகளை வெகுவாக புண்படுத்தி உள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் கனடா நாட்டு அதிகாரிகளிடம் எடுத்து கூறியுள்ளோம். எங்களது வருத்தங்களையும் தெரிவித்து கொண்டுள்ளோம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் காலிஸ்தான் இயக்கம் ஈடுபட்டு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி கனடா நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பிராம்ப்டன் நகர மேயர் பேட்ரிக் பிரவுன், கவுரி சங்கர் இந்து கோவில் அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
எங்களது நகரிலோ அல்லது நாட்டிலோ வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான தாக்குதலுக்கு இடம் கிடையாது. இது தொடர்பில் பொலிஸாரிடம் விசாரிக்க கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரும் அவர்களுடைய வழிபாட்டு தலத்தில் பாதுகாப்புடனான உணர்வுடன் இருக்க செய்வோம் என டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.