அவுஸ்திரேலியாவில் அன்ஜாக் தின நிகழ்வு; வெளியான வரலாற்று பின்னணி!
அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற அன்ஜாக் தின நிகழ்வுகளில் பெருமளவு அவுஸ்திரேலியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
முதலாம் உலக யுத்தகாலத்தில் பகுதியில் அவுஸ்திரேலிய நியுசிலாந்து படையினர் கலிபொலியில் தரையிறங்கியதை குறிக்குமுகமாகவே அன்ஜாக் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
எட்டுமாதம் கடுமையாக போரிட்ட பின்னர் அன்ஜாக்குகள் தோல்வியை சந்தித்தனர், ஆனால் அவர்களின் வீரம் இராணுவதியாகத்தின் நிலையான அடையாளமாக மாறியுள்ளது. அன்ஜாக் என்பது அவுஸ்திரேலியா நியுசிலாந்து ஆர்மிகோப் என்பதை குறிக்கின்றது.
1915ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய நியுசிலாந்து படைகள் இணைந்து கலிபொலி குடாவை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.நேசநாட்டு கடற்படைகளிற்கு கருங்கடல் ஊடாக பாதையை திறப்பதற்காக கலிபொலியை கைப்பற்றுவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக காணப்பட்டது.
முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனியின் சகாவாக விளங்கிய ஒட்டமன் சாம்ராஜ்யத்தின் தலைநகரமான கொன்ஸ்டன்டி நோபிளை கைப்பற்றுவதே முக்கிய நோக்கமாக காணப்பட்டது.
25ஆம் திகதி அன்ஜக்படைகள் கலிபொலியில் தரையிறங்கி முஸ்தபா கெமல் தலைமையிலான ஒட்டமன் இராணுவத்தின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டன.
ஒட்டமன் சாம்ராஜ்யத்தை மின்னல்வேக தாக்குதலில் வீழ்த்தும் திட்டம் வெற்றியளிக்காமல் மோதல்கள் 8 மாதங்கள் நீடித்தன, இருதரப்பும் பெரும் உயிரிழப்புகளை சந்தித்த நிலையில் 1915 இல் நேசநாட்டு படைகள் வெளியேற்றப்பட்டன.
8790 அவுஸ்திரேலிய படையினர் 2721 நியுசிலாந்து படையினர் உட்பட 50,000க்கும் அதிகமான நேசநாட்டு படையினர் கொல்லப்பட்டனர்.
இதன் 108 வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
அவுஸ்திரேலியாவின் நகரங்கள் பலவற்றிலும் அன்ஜாக் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.