ஆண்டு தோறும் பூஸ்டர் தடுப்பூசி? கனடாவில் முக்கிய மருந்து நிறுவனம் சூசகம்
கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் உலக நாடுகளில் வேகமாக வியாபித்துவரும் நிலையில், ஆண்டு தோறும் பூஸ்டர் தடுப்பூசிக்கான வாய்ப்பு தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக மாடர்னா மருந்து நிறுவன முக்கிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடு தென்னாபிரிக்கா நாட்டில் அடையாளம் காணப்பட்டது. ஓமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள குறித்த மாறுபாடானது தற்போது கிட்டத்தட்ட 90 நாடுகளில் பரவியுள்ளதாகவும், அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் வியாபித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
பல நாடுகள் பயணத்தடைகள், ஊரடங்கு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் கனடாவுக்கான மாடர்னா மருந்து நிறுவனத்தின் தலைவர் Patricia Gauthier தெரிவிக்கையில்,
தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு நான்காவது டோஸ் தேவைப்படுமா அல்லது ஆண்டு தோறும் பூஸ்டர் தடுப்பூசிக்கான தேவை இருக்குமா என ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
mRNA-1273 பெயரிடப்பட்டுள்ள தங்களின் புதிய பூஸ்டர் தடுப்பூசியானது ஓமிக்ரான் பரவலுக்கு எதிராக நன்கு செயல்படுவதாகவும், ஓமிக்ரான் தொற்றுக்கு என குறிப்பாக தடுப்பூசி ஒன்றை வடிவமைத்து வருவதாகவும், 2022 துவக்கத்தில் மருத்துவ ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தற்போது புழக்கத்தில் இருக்கும் பூஸ்டர் தடுப்பூசிகளை கனேடியர்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.