அமெரிக்காவை அதிரவைத்த மீண்டுமொரு துப்பாக்கிச்சூடு சம்பவம்! 10 பேர் படுகாயம்
அமெரிக்காவில் மீண்டுமொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடத்தப்பட்ட நிலையில் 10 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடக்கும் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவங்கள் அந்த நாட்டையே அதிரவைத்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள லேக்லேண்ட் நகரில் அயோவா அவென்யூ என்கிற இடத்தில் மக்கள் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்றது.
பின்னர் அந்த காரில் இருந்த 4 பேர் ஒரே நேரத்தில் கார் ஜன்னல் கண்ணாடிகளை இறக்கிவிட்டு காருக்குள் இருந்தபடியே சாலை ஓரம் நடந்து சென்றவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். பின்னர் அந்த கார் அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள பிளம் ஸ்ட்ரீட் என்ற இடத்துக்கு சென்றது.
அங்கும் அந்த மர்ம நபர்கள் 4 பேரும் காரில் இருந்தபடியே சாலையில் நடந்து சென்றவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.
அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட 10 ஆண்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.