கிரீன்லாந்தை கைப்பற்ற நினைப்பவர்களுக்கு துப்பாக்கிச் சூடு; டென்மார்க் பகிரங்க எச்சரிக்கை !
கிரீன்லாந்தைக் கைப்பற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், டென்மார்க் தனது இறையாண்மையை பாதுகாக்க அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதாவது வெளிநாட்டுப் படைகள் எவையாவது கிரீன்லாந்துக்குள் நுழைய முயன்றால், மேலிடத்து உத்தரவுக்காகக் காத்திருக்காமல் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்த டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் தனது வீரர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

உத்தரவுக்காகக் காத்திருக்காமல் உடனடியாக துப்பாக்கிச் சூடு
1952ஆம் ஆண்டு பனிப்போர் காலத்து விதியான இது, தற்போதைய பதற்றமான சூழலில் மீண்டும் நடைமுறைக்கு வருவதான சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது என்றும், அங்கு ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதோடு , தேவையேற்பட்டால் இராணுவ பலத்தைப் பயன்படுத்தியும் அதனைக் கைப்பற்றலாம் என அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் இந்த நகர்வு நேட்டோ கூட்டமைப்பின் முடிவுக்கு வழிவகுக்கும் என டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் எச்சரித்துள்ளார்.
கிரீன்லாந்தில் கொட்டிக்கிடக்கும் அரிய வகை கனிமங்கள் மற்றும் எரிபொருட்களைக் குறிவைத்தே இந்தப் போட்டி நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே கிரீன்லாந்துக்குள் நுழைய கால் வைத்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என டென்மார் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.