ட்ரம்பிற்கு பிடியாணை; குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை
ஈரானின் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியை கொலை செய்த வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு பிடியாணை பிறப்பித்து ஈராக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஈரான் நாட்டின் புரட்சிப்படைத் தலைவரும், இராணுவத் தளபதியுமான காசிம் சுலைமானி, அவரின் மருமகன் முகந்திஸ் உள்ளிட்ட 9 பேரைக் பாக்தாத் விமான நிலையத்தில் ஆள் இல்லா விமானம் மூலம் குண்டுவீசித் தாக்கி அமெரிக்க இராணுவம் கொன்றது.
அமெரிக்கர்களைக் கொல்வதற்கு சுலைமானி திட்டமிட்டார், அதனால் கொன்றோம் என்று ஒற்றை வரியில் அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது.
இதனையடுத்து அமெரிக்க அரசின் “கட்டவிழ்த்துவிட்ட தீவிரவாதத்தால்தான் சுலைமானி கொல்லப்பட்டார். அதற்குப் பழி தீர்ப்போம்” என்று ஈரான் தெரிவித்திருந்தது. ஈரான் ஷியா முஸ்லிம்களின் ஆதர்ஷ ஹீரோவாகவும், ஈரானிய இராணுவத்தைக் கட்டமைத்து வலுப்படுத்தியவருமான சுலைமானி படுகொலை ஈரான் அரசை உலுக்கியது. இதன் காரணமாக அமெரிக்கா மீதான கோபம் ஈரானிற்கு இன்னும் குறையவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைக் கைது செய்ய கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சுலைமானியின் மருமகன் அபு மஹ்தி அல் முகந்திஸைக் கொலை செய்த வழக்கில் ஜனாதிபதி ட்ரம்ப்பைக் கைது செய்ய ஈராக் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
பாக்தாத் விசாரணை நீதிமன்றம், இராணுவத் தளபதி காசிம் சுலைமானி, அபு மஹ்தி அல் முகந்திஸ் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வருகிறது. அந்தவகையில் கடந்த வாரம் முகந்திஸ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய நீதிமன்றம், அவர்களிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.
இந்நிலையில் காசிம் சுலைமானி, முகந்திஸ் இருவரையும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான இராணுவம் திட்டமிட்டுக் கொலை செய்துள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து இறங்கவுள்ள ட்ரம்ப்பைக் கைது செய்ய பாக்தாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ட்ரம்ப் மீதான கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.