வட்டி வீதம் குறித்து கனடிய மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
கனடிய மத்திய வங்கி இம்முறை வட்டி வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளது. மத்திய வங்கி தொடர்ச்சியாக ஏழு முறை வட்டிவீதங்களை குறைத்திருந்தது.
மத்திய வங்கியின் பிரதான வட்டி விகிதம் இன்றைய நிலவரப்படி 2.75% ஆக பராமரிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு, வட்டிவீதம் குறைக்காமல் பேணப்படும் முதல் முறை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இறக்குமதி சுங்கவரி (tariff) சூழ்நிலை பொருளாதாரத்தில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பதை சற்று கூடுதல் காலம் கவனிக்கவே வட்டி விகிதத்தில் திருத்தம் செய்யாதிருக்க முடிவு செய்தோம்,” என மத்திய வங்கி ஆளுநர் டிஃப் மேக்லெம் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி தற்போது பொருளாதார வளர்ச்சியைப் பற்றி இரண்டு சாத்தியமான நிலைப்பாடுகளையும் முன்வைத்துள்ளது.
முதல் நிலைமையில், சுங்கவரி பிரச்சினை விரைவில் தீர்வு காணப்பட்டு, பொருளாதாரம் சிறிய பாதிப்புடன் மீண்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது நிலைமையில், நீண்டகால உலக வர்த்தகப் போர் உருவாகி, ஒரு ஆண்டிற்கும் மேல் கனடா பொருளாதாரம் மந்தநிலைக்குள் சிக்கிக்கொள்வதற்கான ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தின் நிதானமான முன்னேற்றத்தையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி முழுமையாக உறுதிபூண்டுள்ளது என மேக்லெம் குறிப்பிட்டுள்ளார்.