வானூர்தியில் படுக்கைப் பூச்சிகள் ; பயணச் சேவை இரத்து
இத்தாலியிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிப் பயணிக்கவிருந்த வானூர்தியில் படுக்கைப் பூச்சிகள் பரவியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த வானூர்தியின் பயணச் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிலிருந்து இத்தாலியின் ரோம் நகருக்குச் சுமார் 17 மணித்தியாலங்கள் பயணித்த குறித்த வானூர்தியில், படுக்கைப் பூச்சிகள் கடித்ததாகப் பல பயணிகள் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயணிகளுக்கு ஏற்பட்ட அரிப்பைக் கட்டுப்படுத்த மருந்துகள் வழங்கப்பட்டதாகவும், பின்னர் அவை தீர்ந்துவிட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வானூர்தியின் சாதாரண பயணிகள் வகுப்பில் உள்ள சில ஆசனங்களில் படுக்கைப் பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொறியியல் மற்றும் பராமரிப்புக் குழுவினரின் உதவியுடன் விசேட சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக அந்த வானூர்தி சேவை நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பயணச் சேவை இரத்து செய்யப்பட்டமைக்காகப் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ள வானூர்தி நிறுவனம், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.
அத்துடன், அவர்களின் அசல் பயணத் திட்டத்தின்படி 48 மணித்தியாலங்களுக்குள் மாற்று வானூர்திப் பயணங்களையும் ஏற்பாடு செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.