நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாட்டில் பங்கேற்கும் ஜோ பைடன்!
பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று வியாழக்கிழமை (24-03-2022) நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தை எட்டிய நிலையில், நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நடக்கிறது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) உள்பட 30 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
ஜி-7 தலைவர்கள் கூட்டத்திலும் ஜோ பைடன் பங்கேற்று பேசுகிறார். மேலும், அவர் ஐரோப்பிய கவுன்சில் அமர்விலும் கலந்துகொண்டு பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளின்போது உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பதுடன், தற்போதைய தடைகளை மேலும் இறுக்குவது பற்றியும் தனது கூட்டாளிகளுடன் ஜோ பைடன் விவாதிக்க உள்ளார்.
பின்னர், போலந்து செல்கிற ஜோ பைடன், அங்குள்ள அமெரிக்க படையினரை சந்தித்து பேசுவார்.
இந்த தகவல்களை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.