குடிபோதையில் நடந்த சம்பவத்தால் உயிரிழந்த காதலன்... காதலிக்கு ஆயுள் தண்டனை!
அமெரிக்காவில் கண்ணாமூச்சி விளையாட்டின்போது காதலர் ஜார்ஜ் டோரஸை காதலி சாரா பூன் சூட்கேசுக்குள் வைத்து பூட்டிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் காதலி சாராவுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரை சேர்ந்த 47 வயதான சாரா பூன் பெண்ணும் 42 வயதான ஜார்ஜ் டோரஸ் என்ற நபரும் காதலித்து வந்துள்ளனர்.
ஒரே வீட்டில் வசித்து வந்த இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ம் திகதி வீட்டுக்குள் கண்ணாமூச்சி விளையாடினர்.
இந்த விளையாட்டின்போது அதீத மதுபோதையில் இருந்துள்ளனர். விளையாட்டின்போது காதலர் ஜார்ஜ் டோரஸை சாரா ஒரு சூட்கேசுக்குள் வைத்து பூட்டினார்.
பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் சாரா, காதலன் தாமாக சூட்கேஸில் இருந்து வெளியே வருவார் என நினைத்துக் கொண்டு தூங்க சென்றுவிட்டார்.
மறுநாள் காலை எழுந்து காதலனை தேடினார். பின்னர் அவரை சூட்கேசுக்குள் வைத்து பூட்டியது நினைவு வந்து பதறியடித்துக் கொண்டு சூட்கேஸை திறந்தார்.
அப்போது ஜார்ஜ் டோரஸ் சூட்கேசுக்குள் பிணமாக கிடந்தார். அவர் மூச்சு திணறலுக்கு ஆளாகி இறந்தது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் சாராவை கைது செய்த பொலிஸார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தன.
இதில் சாரா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.