மக்கள் எதிர்ப்புக்கு பணிந்த ஒன்டாரியோ அரசாங்கம்
ஒன்டாரியோ மாகாணத்திற்காகப் புதிய தனியார் சொகுசு விமானத்தை வாங்குவதாக அறிவித்த சில நாட்களிலேயே, அந்த முடிவை ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்டு (Doug Ford) அதிரடியாகக் கைவிட்டுள்ளார்.
சுமார் 28.9 மில்லியன் டாலர் செலவில் அரசுப் பயன்பாட்டிற்காகப் புதிய விமானம் ஒன்றை கொள்வனவு செய்ய ஒன்டாரியோ அரசு திட்டமிட்டிருந்தது.
முதலீடுகளை ஈர்க்கவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் இந்த விமானம் உதவும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

இருப்பினும், பொருளாதார நெருக்கடி நிலவும் வேளையில் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படுவதற்கு எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். நல்ல நோக்கத்திற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இருப்பினும், மக்களின் கருத்துக்களைக் கேட்ட பிறகு, ஒரு அரசு விமானத்திற்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட இது சரியான நேரமல்ல என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன் என போர்ட் தெரிவித்துள்ளார்.
கொள்வனவு செய்யப்பட்ட அந்தப் புதிய விமானத்தை விரைவாக விற்பனை செய்ய 'பாம்பார்டியர்' (Bombardier) நிறுவனம் மற்றும் இதர கூட்டாளிகளுடன் ஒன்டாரியோ அரசு தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
விமானம் இல்லாவிட்டாலும், கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களுடன் தொடர்ந்து உறவை வலுப்படுத்தி, வரி விதிப்புகளுக்கு எதிராகவும், ஒன்டாரியோ தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தான் தொடர்ந்து உழைக்கப் போவதாக டக் ஃபோர்டு உறுதி அளித்துள்ளார்.