சர்க்கரை உணவுகளுக்கான விளம்பரங்களுக்கு பிரித்தானியா தடை
சர்க்கரை உணவுகளுக்கான பகல்நேர ஊடக விளம்பரங்களை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்கிறது. சிறார்களின் உடல் பருமனுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, இனிப்பும் கொழுப்பும் சேர்ந்த பிரபலமான உணவு வகைகளை அடையாளப்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட நடவடிக்கைகளின் கீழ், ஆரோக்கியம் குறைவான உணவு மற்றும் பானங்களைக் காட்டும் விளம்பரங்கள் அடுத்த ஆண்டு ஒக்டோபர் முதல் இரவு 9:00 மணிக்குப் பிறகு மட்டுமே ஒளிபரப்ப அனுமதிக்கப்படும்.
பிரித்தானியாவில் குழந்தைகளிடையே உடல் பருமன்
பிரித்தானியாவில் குழந்தைகளிடையே உடல் பருமன் அதிகரித்து வருகிறது. நான்கு வயது குழந்தைகளில் 10ல் ஒருவர் தற்போது உடல் பருமனாக கருதப்படுகிறார்.
ஐந்து வயது குழந்தைகளில் ஐந்தில் ஒருவருக்கு அதிக இனிப்பு சாப்பிடுவதால் பல் சொத்தை ஏற்படுகிறது. இனி தின்பண்டங்களில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறிப்பிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை தடை செய்யப்பட்ட பட்டியலில் கொண்டைக்கடலை அல்லது பருப்பு சார்ந்த தின்பண்டங்கள், கடற்பாசி சார்ந்த தின்பண்டங்கள் மற்றும் பாம்பே கலவை மற்றும் ஆற்றல் பானங்கள், ஹாம்பர்கர்கள் மற்றும் சிக்கன் நகெட்ஸ் போன்ற பொருட்களும் உள்ளன.
மேலும் புதிய நடவடிக்கைகளால் ஆண்டுக்கு 20,000 குழந்தை பருவ உடல் பருமனை தடுக்க உதவும் என்று பிரித்தானிய அரசாங்கம் நம்புகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.