கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை
கனடாவில் பிரபல நிறுவனங்கள் உணவு பொருட்களை விற்பனை செய்யும் போது மோசடிகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களை கனடிய உற்பத்திகளாக குறித்த நிறுவனங்கள் வெளிப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடிய உணவு ஆய்வு முகவர் நிறுவனம் இது தொடர்பில் பிரபல நிறுவனங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
கனடாவின் மேபில் இலை சின்னத்தை சில நிறுவனங்கள் தவறான முறையில் பயன்படுத்தி தங்களது விற்பனையை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு கனடிய உற்பத்திகள் என இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்த ஒரு நிறுவனத்திற்கும் இதுவரையில் அபராதம் விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா கனடா மீது கூடுதல் அளவில் வரிகளை விதித்துள்ள நிலையில் சுதேச உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணக்கரு அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் கனடிய உற்பத்திகள் என்ற பெயரில் வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விற்பனை செய்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துள்ளது.
குறிப்பாக இது வாடிக்கையாளர்களை பிழையாக வழிநடத்தும் செயல்பாடு எனவும் இதனால் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை இழக்கக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு கனடிய உற்பத்திகள் என்ற போர்வையில் இறக்குமதி பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் சுமார் 160 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேபில் இலை சின்னம் காணப்பட்டாலும் அவை கனடிய தயாரிப்பு என்பதற்கு உத்தரவாதம் கிடையாது எனவும் லேபிள்களை கவனமாக படித்து அவை கனடிய உற்பத்திகளா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும் வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.