கனடாவில் இன்று இரவு வானில் தென்படும் அரிய காட்சி
கனடாவில் இன்றைய தினம் இரவு வானில் அரிய காட்சி தென்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலை வரை நார்தர்ன் லைட்ஸ் எனப்படும் துருவ ஒளிக் காட்சியை காண முடியும் என அமெரிக்க தேசிய சமுத்திரவியல் மற்றும் வானிலை நிர்வாக மையம் (NOAA) அறிவித்துள்ளது.
குறிப்பாக மேற்கு மற்றும் வட கனடா முழுவதும் இந்த அபூர்வமான ஒளி நிகழ்வு தெளிவாக தெரியும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஒளிக் காட்சியை ரசிக்க வாய்ப்பு
வானம் மேகமின்றி இருள் சூழ்ந்திருக்கும் சூழலில், பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பெர்டா, சஸ்காச்சுவான், மனிடோபா, கனடாவின் வடக்கு மண்டலங்கள், வட ஒன்டாரியோ மற்றும் கியூபெக் பகுதிகளில் நேரடியாக மேல் வானில் துருவ ஒளி படர்ந்து காணப்படும்.
தெற்கு ஒன்டாரியோ, தெற்கு கியூபெக் மற்றும் அட்லாண்டிக் மாகாணங்களின் மேற்கு பகுதிகளிலும், வடக்கு வானம் மேக மூட்டங்கள் இன்றி காணப்படும் இடங்களில், இந்த ஒளிக் காட்சியை ரசிக்க வாய்ப்பு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு முழுவதும் இந்த ஒளி நிகழ்வு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கிழக்கு நேரப்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அதிக பிரகாசத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன் வெளியேற்றிய மிகப்பெரிய மின்மங்கள் மற்றும் காந்தப்புல வெடிப்பு காரணமாக இந்த துருவ ஒளி ஏற்படுகின்றது.