தனது வான்வெளியில் பறந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்திய கனடா! பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவின் அணு ஆயுத தளத்துக்கு மேலே உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் தகதி கண்டுபிடிக்கப்பட்டது.
அது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டிருந்தது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் (Joe Biden) உத்தரவின் பேரில் கடந்த 4-ம் திகதி சீன உளவு பலூன் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, பலூன் விவகாரத்தில் அரசியல் ரீதியில் தங்களை தவறாக சித்தரிக்கும் செயல் என்று குற்றம் சாட்டியது.
இப்படி உளவு பலூன் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா இடையே மோதல் வலுத்து வருகிறது.
அமெரிக்க வான்பரப்பில் மீண்டும் ஒரு மர்ம பொருள் பறந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறான நிலையில், கனடாவின் வான்வெளியில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.