கனடா குறித்த டிரம்பின் கருத்தை பொய்ப்பிக்கும் வகையில் ஆய்வு வெளியீடு
அமெரிக்காவில் கைப்பற்றப்படும் பென்டனில் போதைப்பொருட்களில் பெரும்பாலும் கனடாவிலிருந்து வருவதில்லை எனத் தெரிவிக்கும் புதிய ஆய்வொன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிற்கு அதிகளவில் போதைப் பொருட்கள் கனடாவிலிருந்து கடத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியே ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மீது வரி விதிக்கும் தீர்மானங்களை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மென்ஹாட்டன் இன்ஸ்டிடியூட் எனும் அமெரிக்க சிந்தனைக்கழகம் வெளியிட்ட அறிக்கையாகும்.
இந்த ஆய்வு கனடா மற்றும் மெக்ஸிகோ எல்லைகளில் உள்ள 80 மாவட்டங்களில், 2013 முதல் 2024 வரையிலான ஆயிரக்கணக்கான பெரிய அளவிலான பென்டனில் கைப்பற்றல்களை ஆய்வு செய்தது.
அதில், 99% பென்டனில் மாத்திரைகள் போதைப் பொருட்கள் எல்லைகளிலான பெரிய அளவிலான கைப்பற்றல்களில் மெக்ஸிகோ எல்லை மாவட்டங்களில் இருந்துதான் வந்துள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.
கனடா எல்லை வழியாக இடம்பெற்ற கைப்பற்றல்கள் மிகவும் குறைவாகவே இருந்தன.
அறிக்கையில், “புதிய தரவுகள், பெரும்பாலான சட்டவிரோத பென்டனில் மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைகிறது என்பதையே மீண்டும் உறுதிப்படுத்துகின்றன,” என்றும், “வடக்கு எல்லை சார்ந்த ஆபத்துகள் அதிகம் என்பதைக் கூறி விதிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கொள்கைகள் மறுபரிசீலனைக்குரியவை,” என்றும் கூறப்பட்டுள்ளது.