கடவுச்சீட்டு தர வரிசையில் அமெரிக்காவை முந்திய கனடா
கடவுச்சீட்டு தர வரிசையில் அமெரிக்காவை விடவும் கனடா முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் சுதந்திரத்தின் அடிப்படையில், கனடிய கடவுச்சீட்டு தற்போது அமெரிக்காவை முந்தியுள்ளது என ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் (Henley Passport Index) வெளியிடப்பட்ட புதிய தரவரிசை தெரிவிக்கிறது.
இந்த தரவரிசையின் படி, கனடா 9வது இடத்திலும், அமெரிக்கா 12வது இடத்திலும் உள்ளது. முந்தைய ஆண்டுகளில் இரு நாடுகளும் 7வது இடத்தில் இணைந்து இருந்தன.
ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் (Henley & Partners) நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளாக இந்த உலக கடவுச்சீட்டு தரவரிசையை வெளியிட்டு வருகிறது.
இவ்வாண்டு தரவரிசையில் ஏற்பட்ட மாற்றம், அமெரிக்கா அண்மையில் அறிமுகப்படுத்திய கடுமையான விசா விதிமுறைகளுக்கும், அதற்கு பதிலாக சில நாடுகள் அமெரிக்கப் பயணிகளுக்கு விதித்த எதிர்வினை நிபந்தனைகளுக்கும் காரணமாகும் என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுடன் ஒப்பிடும்போது, கனடியர்கள் பெலாரஸ் (Belarus), பப்புவா நியூ கினி (Papua New Guinea), உஸ்பெகிஸ்தான் (Uzbekistan) போன்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். அதேபோல, பொலிவியா (Bolivia) மற்றும் ருவாண்டா (Rwanda) நாடுகளிலும் விசா வருகைச்செலவில்லாமல் நுழையலாம்.
விசா சுதந்திர பயணத்தை தனித்தனியாக கணக்கிட்டால், கனடா 32வது இடத்திலும், அமெரிக்கா 37வது இடத்திலும் உள்ளது. இரு நாடுகளும் கடந்த ஆண்டு 26வது இடத்தில் இணைந்து இருந்தன.