அமெரிக்காவில் முகநூல் பயன்படுத்திய கனடியர்களுக்கு நட்டஈடு?
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் கனடியர்கள் முகநூல் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் முகநூல் பயன்படுத்தும் கனடியர்கள் உள்ளிட்ட முகநூல் பயனர்களுக்கு இந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
உலகின் முதனிலை சமூக ஊடகங்களில் ஒன்றான முகநூல் நிறுவனம் பயனர்களின் தனி உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் முகநூல் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. முகநூல் நிறுவனம் பயனர்களுக்கு 725 மில்லியன் டொலர் நட்ட ஈடு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் முகநூல் பயன்படுத்திய பயனர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்க பெற்றுள்ளது.
குறித்த காலப்பகுதியில் அமெரிக்காவில் வாழ்ந்த கனடியர்கள் இந்த நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கேம்பிரிட்ஜ் அனலடிக்கா என்னும் நிறுவனம் முகநூல் தகவல்களை கசிய விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக இவ்வாறு பயனர்களின் தகவல்கள் பகிரப்பட்டமை காரணமாக நிறுவனத்திடம் இருந்து நட்டஈடு கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த நட்ட ஈட்டுத் தொகையை வழங்குவதற்கு முகநூல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா இணங்கி இருந்தது.
இதன்படி 2007 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்காவில் வசித்த முகநூல் பயனர்கள் இந்த நட்டஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.