கனடாவில் முதலீடுகளைக் குவிக்க பிரதமர் கார்னி திட்டம்!
டொராண்டோவில் நடைபெற்று வரும் உயர்மட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில், கனடாவின் பொருளாதாரத்தைப் பெருமளவில் கட்டியெழுப்புவதற்கான அபார வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
மேலும், பல முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவின் வரலாற்றிலேயே முதன்முறையாக நடத்தப்படும் இந்த முதலீட்டு மாநாட்டில் பங்கேற்பதற்காக, உலகின் முன்னணி நிறுவன தலைவர்களும் உயர் அதிகாரிகளும்டொராண்டோவிற்கு வருகை தந்துள்ளனர்.

ராயல் ஒன்டாரியோ அருங்காட்சியகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மார்க் கார்னி உரையாற்றியுள்ளார்.
உலகம் விரும்பும் எல்லாமே நம்மிடம் உள்ளன: ஆற்றல், வளங்கள், திறமை, தொழில்நுட்பம் மற்றும் மூலதனம் என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில், "எந்தவொரு பேலன்ஸ் ஷீட்டிலும் காண முடியாத ஒன்றுதான் நமது மிகப்பெரிய பலம்; அதுதான் 'நம்பிக்கை'" என்றார்.
இகாலுயிட் முதல் விக்டோரியா, கியூபெக் நகரம் மற்றும் செயிண்ட் ஜான்ஸ் வரை ஒரு புதிய ஒருமித்த கருத்து உருவெடுத்துள்ளது: கனடா தனது எதிர்காலத்தைத் தன் கையிலெடுத்துள்ளது என்று கூறினார்.
அடுத்த 5 ஆண்டுகளில் கனடாவில் 1 டிரில்லியன் டொலர் முதலீட்டை ஈர்ப்பதற்கான திட்டத்தின் முக்கிய அங்கமாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது.