கனடாவில் சோகம்: டிப்பர் லாரியுடன் கார் மோதி 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், நார்த் பே பகுதிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலை 17-இல், பயணிகள் கார் ஒன்றும் டிப்பர் லாரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
திங்கள்கிழமை மாலை சுமார் 5:20 மணியளவில் ஈஸ்ட் ஃபெர்ரிஸ் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை தெரிவித்துள்ளது.
காரில் பயணித்த 11 வயது சிறுவன் தீவிர காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

காரில் பயணித்த மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து, காவல்துறையின் விபத்து விசாரணை மற்றும் போக்குவரத்து மேலாண்மைப் பிரிவினர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதன்காரணமாக நெடுஞ்சாலை 17 சுமார் 6 மணி நேரத்திற்கு மூடப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது அந்தச் சமயத்தில் அப்பகுதியில் சென்ற வாகனங்களின் கேமராவில் காட்சிகள் பதிவாகியிருந்தால், நார்த் பே காவல் பிரிவை 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தகவல்களை ரகசியமாக வழங்க விரும்புவோர் 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பை 1-800-222-8477 எனும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.