ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு அல்பர்ட்டா முதல்வர் கண்டனம்
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே தீவிரமடைந்துள்ள வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு அல்பர்ட்டா மாகாண முதலமைச்சர் டேனியல் ஸ்மித் நேரடியாக அமெரிக்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் 'பாக்ஸ் பிசினஸ்' ஊடகத்தில் உரையாற்றிய அவர், கனடாவின் ஒன்டாரியோ ஏரியை 'லேக் அமெரிக்கா' என பெயர் மாற்றம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சி குறித்து கனடிய மக்கள் கடும் குழப்பமும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பொருளாதார மற்றும் இராணுவ உறவைக் சுட்டிக்காட்டிய டேனியல் ஸ்மித், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களுடன் கனடியப் படைகள் தோளோடு தோள் நின்று போரிட்டதையும், விரைவில் வரவிருக்கும் 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 25வது நினைவேந்தலையும் நினைவுகூர்ந்தார்.

கனடாவைப் பலவீனப்படுத்த அமெரிக்கா ஏன் விரும்புகிறது என்பது எங்களுக்குப் புரியவில்லை.
நாம் இணைந்து செயல்படும்போதே வலுவாக இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22 முதல் கனடிய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்தது.
இதற்குப் பதிலடியாக செப்டம்பர் 8 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என கனடா அறிவித்துள்ளது.
இந்த வர்த்தகப் போரினால் இரு நாடுகளிலும் உள்ள சிறு வணிகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெருமளவிலான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என ஸ்மித் எச்சரித்துள்ளார்.
ஒன்டாரியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட் உள்ளிட்டோர் அனைத்துக் காரணிகளையும் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய போதிலும், அல்பர்ட்டா மாகாணத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகளை வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஒரு பலப்பரீட்சைக் கருவியாகப் பயன்படுத்தப் போவதில்லை என ஸ்மித் மீண்டும் தெளிவுபடுத்தினார்.
ட்ரம்ப் நிர்வாகமும் கனடிய பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கமும் உடனடியாகப் பேச்சுவார்த்தை மேஜைக்குத் திரும்பி இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.