தைவானை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம்: நான்சி பெலோசி திட்டவட்டம்
சீனாவால் தைவானை தனிமைப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் தைவான் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தைவானின் கடற்பரப்புகளில் சீனா மேற்கொள்ளும் ராணுவ பயிற்சிகள் குறித்து நேரடியாக பதிலளிக்காத நான்சி பெலோசி, தைவான் அதிகாரிகள் மற்ற இடங்களுக்குச் செல்வதை வேண்டுமானால் சீனா தடுக்கலாம்.
ஆனால், நாங்கள் அங்கு பயணிப்பதன் மூலம் தைவானை தனிமைப்படுத்தும் முயற்சி நடக்காது. தைவானை சீனா தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு அதிரடி பயணம் மேற்கொண்டார்.
இதனையடுத்து தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும் சீனா கொந்தளித்தது. அத்துடன், தைவான் கடற்பரப்பில் மொத்தமாக சுற்றிவளைத்து போர் ஒத்திகையிலும் ஈடுபட்டது.
இந்த ஒத்திகையானது ஞாயிற்றுக்கிழமை வரையில் நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது. இதனிடையே, சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று தைவான் ராணுவம் பகிரங்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.