சீனாவின் புதிய வானூர்தி இறங்குதளம் ; செயற்கைக்கோள் படங்கள் வெளியிட்ட தகவல்
தென்சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பராசெல் (Paracel) தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான அண்டெலோப் ரீஃப் (Antelope Reef) பகுதியில், சீனா வானுார்தி இறங்குதளமொன்றை (airstrip) அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாக அண்மைக்கால செயற்கைக்கோள் படங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு ஆய்வாளர்களின் கணிப்பின் படி, இதற்கான கட்டுமானப் பணிகள் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'வன்டர்' (Vantor) என்ற செயற்கைக்கோள் தொழில்நுட்ப நிறுவனத்தினால் செப்டம்பர் 25 ஆம் திகதி எடுக்கப்பட்ட படங்களில், காணி தயார்படுத்தல், கான்கிரீட் மற்றும் மண் அமுக்கும் இயந்திரங்களின் இயக்கம் மற்றும் புதிய படகுத்துறைக்குக் கூழாங்கற்கள் ஏற்றிவரும் கப்பல்களின் வருகை போன்றவை தெரியவந்துள்ளன.

தென்சீனக் கடலில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் சீனா மேற்கொண்ட மிகப்பெரிய இராணுவத் திட்டமாக இது கருதப்படுவதோடு, அந்த நாட்டின் கடற்படை மற்றும் வானுார்திப்படைத் திறன்களை இது மேலும் பலப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஹைனான் (Hainan) தீவிற்கு இந்தப் புதிய தளம் கணிசமான பாதுகாப்பை வழங்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், இங்கு கடற்படை அல்லது இராணுவத் தளம் அமைப்பதை சீனா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
மாறாக, வானிலை முன்னறிவிப்பு மற்றும் சமுத்திரவியல் ஆராய்ச்சி போன்ற பொதுமக்களுக்கான தேவைகளுக்காகவே இந்த வசதி உருவாக்கப்படுவதாக சீன அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்டெலோப் ரீஃப் உள்ளிட்ட ஒட்டுமொத்த பராசெல் தீவுக்கூட்டத்திற்கும் வியட்நாம் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளும் இறையாண்மை கோரி வரும் நிலையில், 1974 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீனா இந்த தீவுகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.