90 கோடி பேருக்கு... சீனா தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்
சீனாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 11ம் திகதி 90 கோடியை கடந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பரவல் சீனாவில் மீண்டும் அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதை சீன அரசு மறுத்தது.
இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 11ம் திகதி 90 கோடியை கடந்து விட்டதாகவும் நாட்டில் 64 சதவீதம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பீகிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஊரடங்கு தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் டிசம்பர் மாதம் நீக்கிய பின்னர் சீன அரசாங்கம் முதன் முறையாக இறப்பு எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 8ம் திகதி முதல் ஜனவரி 12ம் திகதி வரையில் 59,938 பேர்கள் கொரோனா பாதிப்பு தொடர்பில் இறந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. மேலும், சுகாதார மையங்களில் பதிவான இறப்பு எண்ணிக்கை இதுவாக இருக்கலாம் எனவும், மொத்த எண்ணிக்கை பல மடங்காக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு தொடர்பில் சீனா முழுமையான தரவுகளை வெளியிடாமல் உண்மையை மறைத்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தது.
ஆனால் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவிக்கையில், இறப்பு மற்றும் பாதிப்பு தொடர்பில் உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என்பது கட்டாயமல்ல என தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமையன்று சீனாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கையில், இறந்தவர்களின் சராசரி வயது 80.3 என்றும், இறப்புகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தெரிவித்தனர்.
அத்துடன், 60 வயதுக்கு மேற்பட்ட மில்லியன் கணக்கான மக்கள் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.