தென் கொரிய மக்களுக்கு விசா மறுப்பதாக அறிவித்த சீனா: வெளியான பின்னணி
தென் கொரிய மக்கள் சுற்றுலா அல்லது வணிகத்திற்காக நாட்டிற்கு வருவதற்கான விசா வழங்குவதை சீனா நிறுத்தி வைத்துள்ளது.
சீன மக்களுக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை உட்பட கட்டுப்பாடுகளை தென் கொரியா விதித்திருந்த நிலையிலேயே, இந்த விசா மறுப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளதாக நம்பப்படுகிறது.
சீனாவின் இந்த அறிவிப்பு ஜப்பான் பயணிகளையும் பாதிக்கும் என அந்த நாட்டின் முதன்மை பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுபோன்ற நகர்வுகள் எதிர்பார்த்தது தான் என குறிப்பிட்டுள்ள ஜப்பான் வெளிவிவகார அதிகாரி ஒருவர், இந்த விவகாரம் தொடர்பில் சீன அதிகாரிகளுடன் உத்தியோகப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
சீன மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறப்பு விதிகளை நீக்கும் வரையில் இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் என சீன நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், சீன மக்களுக்கு என மட்டும் சிறப்பு கொரோனா விதிகளை அமுலுக்கு கொண்டுவந்துள்ள நாடுகள் மீது தங்கள் தரப்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றே சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது.
தற்போது தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு விசா மறுப்பதாக அறிவித்துள்ள சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் மீதும் முன்னெடுக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.