சீன பிட்காயின் ராணி ₹57 000 கோடி மோசடி ; பிரிட்டனில் கைது
உலகிலேயே மிகப் பெரிய ஒற்றை கிரிப்டோகரன்சி பறிமுதல் வழக்குகளில் ஒன்றைக் கையாண்ட பிறகு, £5.5 பில்லியன் (சுமார் ₹57,000 கோடி) மதிப்புள்ள பாரிய பொன்ஸி (Ponzi) மோசடியை அரங்கேற்றிய சீனப் பெண் ஒருவருக்கு பிரிட்டனில் பணமோசடி வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸிமின் கியான் (Zhimin Qian) (47), என்பவர் இந்த மோசடியின் மூளையாகச் செயல்பட்டவர். இவர் பத்திரிகைகளில் “சீனாவின் பிட்காயின் ராணி” அல்லது “செல்வத்தின் கடவுள்” என்று அழைக்கப்பட்டார்.

சீனாவில் இருந்து லண்டனுக்கு தப்பியோட்டம்
கியான், தனது லான்தியன் கெருய் (Lantian Gerui) என்ற நிறுவனம் மூலம் 2014 முதல் 2017 வரை சீனாவில் ஒரு பாரிய பொன்ஸி திட்டத்தை (புதிய முதலீட்டாளர்களின் பணத்தைப் பயன்படுத்தி பழைய முதலீட்டாளர்களுக்கு வட்டி கொடுக்கும் திட்டம்) நடத்தினார்.
இந்நிறுவனம் சுகாதாரப் பொருட்கள் மற்றும் கிரிப்டோ சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகப் பொய் கூறி, அதிக லாபம் தருவதாக உறுதியளித்தது.
இந்தத் திட்டத்தில் சீன மாகாணங்கள் முழுவதும் உள்ள சுமார் 1,28,000 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பலர் நடுத்தர மற்றும் வயதான முதலீட்டாளர்கள் ஆவர்.
மொத்த முதலீடுகள் 40 பில்லியன் யுவானை (சுமார் £5.5 பில்லியன்) தாண்டியது. சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பெரும்பாலான முதலீட்டு நிதிகளைக் கியான் பிட்காயின் சொத்துக்களாக மாற்றினார் சீன அதிகாரிகள் 2017-இல் விசாரணையைத் தொடங்கியதும், கியான் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டை விட்டுத் தப்பி, பிரிட்டனுக்குள் நுழைந்தார்.
அவர் லண்டனின் ஹாம்ப்ஸ்டெடில் (Hampstead) மாதத்திற்கு £17,000 வாடகை செலுத்தி ஆடம்பரமான மாளிகையில் வசித்தார். அங்கு பழங்காலப் பொருட்கள் மற்றும் வைரங்களின் வாரிசு என்று போலிக் காட்டிக்கொண்டார்.
பல வருட தேடலுக்குப் பிறகு, கியான் 2024 ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் யார்க் (York) நகரில் கைது செய்யப்பட்டார்.
கியான் வாடகைக்கு எடுத்திருந்த லண்டன் வீட்டில் 2018-இல் லண்டன் காவல்துறை (Metropolitan Police) சோதனை நடத்தியபோது, 61,000 பிட்காயின்களைக் கொண்ட ஹார்ட் டிரைவ்கள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட நேரத்தில் அதன் மதிப்பு £5 பில்லியனுக்கும் அதிகமாகும், இது உலகின் ஒற்றை மிகப் பெரிய கிரிப்டோகரன்சி பறிமுதல் என்று கருதப்படுகிறது.
கிரிமினல் சொத்துக்களை (பிட்காயின்) சட்டவிரோதமாகப் பெற்றது மற்றும் வைத்திருந்தது ஆகிய குற்றங்களை கியான் ஒப்புக்கொண்டார்.
அவருக்குப் பணமோசடி வழக்கில் 11 ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திருடப்பட்ட சொத்துக்களைப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருப்பி அளிப்பதற்கான இழப்பீட்டுத் திட்டம் குறித்து பிரிட்டன் அதிகாரிகள் தற்போது சிவில் நடவடிக்கைகளில் பணியாற்றி வருகின்றனர்.