சீன அதிகாரிக்கு அமெரிக்காவில் 20 வருட சிறைத் தண்டனை!
உளவு பார்த்த குற்றச்சாட்டில் சீன புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
ஹு யான்ஜுன்(Hu Yanjun) என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு வான்-விண்வெளி நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பங்களை திருடியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த மேற்படி புலனாய்வு அதிகாரி 2018 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருதார்.
ஹு யான்ஜுன்(Hu Yanjun) உட்பட 11 சீனப் பிரஜைகள் மீது 2018 ஒக்டோபரில், அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்திலுள்ள நீதிமன்றமொன்றில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட ஹு யான்ஜுன் (Hu Yanjun) , குற்றவாளி என கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில் அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. அமெரிக்க வர்த்தக இரகசியங்களைத் திருட முயற்சிக்கும் எனவரையும் நாம் பொறுப்புக்கூற வைப்போம் எனும் சமிக்ஞையை இவ்வழக்கு அளிக்கிறது என ஒஹையோ சமஷ்டி வழக்குத் தொடுநர் கென்னத் பார்க்கர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஹு யான்ஜுன் (Hu Yanjun) மீதான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை என சீன வெளிவிவகார அமைச்சு இன்று கூறியுள்ளது.