அமெரிக்க அரசு ஊழியருக்கு சீனாவிலிருந்து வெளியேறத் தடை
தனிப்பட்ட பயணமாக சீனாவுக்குச் சென்ற அமெரிக்க அரசுத் துறை ஊழியர் ஒருவர் அந்நாட்டிலிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க வணிகத்துறையின் கீழ் செயல்படும் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகத்தில் பணியாற்றும் அந்த ஊழியர், தனிப்பட்ட காரணங்களுக்காக சீனாவுக்குச் சென்றிருந்தபோது, அவருக்கு “வெளியேறும் தடை” விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளிநாட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் பிரஜைகளின் பாதுகாப்பும் எங்களின் மிக முக்கியமான முன்னுரிமையாகும்,” என வெளியுறவுத்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை நாங்கள் மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். சீன அதிகாரிகளுடன் இது தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க வணிகத்துறையில் பணியாற்றும் சீன-அமெரிக்க இரட்டை குடியுரிமை பெற்ற நபர் ஒருவர், தனது அரசுப் பணியை சீன விசா விண்ணப்பத்தில் குறிப்பிடாததற்காக அவருக்கு சீனா வெளியேறும் தடையை விதித்துள்ளதாக அமெரிக்க ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர் பல மாதங்களுக்கு முன் தனது குடும்பத்தைச் சந்திப்பதற்காக சீனாவுக்கு பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அந்த நபர் 2025 ஏப்ரல் மாதம் சிச்சுவான் மாகாணம், செங்டூ நகரில், “சீன தேசிய பாதுகாப்புக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக” கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.